வெள்ளத்தில் தவிக்கும் மன்னார் - அவசர உதவிகள் கிடைக்கவில்லை - மக்கள் குற்றச்சாட்டு
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற்படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இடம்பெயர முடியாத மக்கள்
தொடர்ச்சியாக அவர்கள் இரவு பகல் பாராது கடமையை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் காவல்துறையினர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் தொடர்ச்சியாக மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடம்பெயர முடியாத மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
துரித நடவடிக்கை
குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் அப்பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டு இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கான சமைத்த உணவை வழங்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (1) காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
எனவே மக்களின் அவசர நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி - நயன்
மேலும் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) காலை 10.30 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஊடாக ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |