செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசு தன்னுடைய ஆட்சிப் பிரதேச மக்களின் பல்வேறு விதமான தேவைகளையும் நிவர்த்தி செய்துகொள்ள பெரும் அல்லலை எதிர்நோக்குகிறது.
இன்றும் தொடர்பாடலும் தொழிநுட்பமும் உச்ச வளர்ச்சி கண்டுள்ள காலத்திலும் இந்த அவலம் தொடரத்தான் செய்கிறது.
அன்றைய தமிழ் ஈழத்தில் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழ நிலத்தின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்தார் என்பதை இன்று பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
குறிப்பாக அவரின் மாண்புகளை எதிரிகள்கூட சிறப்பித்துப் பேசுகின்ற செய்திகளைக் காண்கிறோம்.
சிறுவர் இல்லங்கள்
வடக்கு - கிழக்கில் இப்போதுள்ள சில சிறுவர் இல்லங்கள் குழந்தைகளின் அநாதரவு நிலையை எப்படி அணுகுகின்றது என்கின்ற கேள்வி எழுகின்றது.
குழந்தைகள் இல்லம், நீதிமன்றம், பிரதேச செயலகம், குழந்தைகளின் வீடு இவைகளுக்கு இடையில் சிக்கலான பயணங்களும் அழுத்தங்களும் நீள்வதை ஒர் ஆசிரியராக களத்தில் கண்டு வருகிறேன்.

இன்றைய குழந்தைகள் இல்லங்கள் அவர்களை அணுகுகின்ற வித்தில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அத்துடன் வீட்டிற்கும் சிறுவர் இல்லத்திற்கும் இடையில் அல்லாடி அலையும் குழந்தைகளை ஓர் ஆசிரியராக சந்திகின்ற வாய்ப்புக்கள் கிட்டுகின்றன.
காந்தரூபனின் கனவு வரலாறு எனக்கு வழிகாட்டி என வாழ்ந்த தலைவரின் வரலாறும் எமக்கு பெரும் வழிகாட்டி எனலாம்.
இனவழிப்புப் போர் நிகழ்கின்ற மண்ணில் அதற்கு எதிராக வீரியமான ஒரு ஆயுதப் போராட்டம் நிகழ்கின்ற வேளையில் போரில் அநாதாரவாக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு வீடு பற்றித் தலைவர் பிரபாகரன் அன்று சிந்தித்தார் என்பதுதான் செஞ்சொலை சிறார் இல்லத்தை நாம் இன்று நினைவுகூர்வதன் அவசியமாகும்.
ஆம் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் நாளன்று செஞ்சோலை பெண்கள் இல்லம் தொடங்கிய நாளாகும். 1990ஆம் ஆண்டு யூலை, 10 ஆம் நாள் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் மரணமடைந்த கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், தலைவர் பிரபாகரனிடம் ஒரு வேண்டுதலை முன்வைத்தார்.
அநாதைகளாய் யாரும் வேண்டாம்
தந்தையரைப் பிரிந்து, இழந்து வாழும் குழந்தைகளுக்கு ஓர் இல்லத்தை அமைத்து அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் தெரிவித்திருந்தார்.

அநாதைகளாய் யாரும் வேண்டாம் நான் ஒரு அனாதை,அப்பா அம்மா இல்லாத பிள்ளை.நான் பட்ட துன்பத்தை என் போன்ற பிள்ளைகள் படக் கூடாது என்று மாவீரன் காந்தரூபன் தலைவரிடத்தில் கூறியிருக்கிறார்.
அதன் காரணமாக 1991ஆம் ஆண்டு யூலை, 10 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நாளில் செஞ்சோலை மகளிர் பாடசாலை யாழ்ப்பாணத்தில் சிறிய இடம் ஒன்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்னர் 1993 கார்த்திகை 13ஆம் நாள் காந்தரூபன் அறிவுச்சோலை ஆரம்பிக்கப்பட்டது.
போர் நிகழந்த மண்ணில் இருந்த அநாதரவான பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததும், யாழ் சண்டிலிப்பாயில் ஒரு இல்லம் நிர்மாணிக்கப்பட்டு ஐப்பசி 22 ஆம் நாள் தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் செஞ்சோலை பெண் குழுந்தைகள் இல்லம் திறந்து வைக்கப்பட்டமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இங்கே கைக்குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான பெண்பிள்ளைகள் வரை தஞ்சம் புகுந்தனர். முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை முதலான பிரிவுகளைக் கொண்ட பிள்ளைகள் இங்கே கல்வியைப் பெற்றனர்.
அநாதைகளற்ற தேசம் அன்றைய தமிழீழத்தில் தெருவில் ஒரு அநாதைக் குழந்தைகளைக் காணமுடியாத நிலையிருந்தது. பிச்சைக்காரர்கள் இல்லாத நாட்டை அன்று போராளிகள் உருவாக்கி இருந்தார்கள்.
கல்வி, எதிர்கால வாழ்வு
செஞ்சோலையில் உள்ள பிள்ளைகளுக்குரிய தேவைகள் யாவும் உரிய வித்தில் நிவர்த்தி செய்யப்பட்டன.
அவர்களின் உணவு, தங்குமிடம், கல்வி, எதிர்கால வாழ்வு என்பன சிறப்பான வகையில் திட்டமிட்டு வழங்கப்பட்டன.
எத்தகைய போர்ச் சூழலிலும் அந்தப் பிள்ளைகளின் வாழ்வை இனியதாக்க வேண்டும் என்பதில் தலைவர் அவர்கள் அதிக சிரக்தையுடன் இருந்தார். செஞ்சோலை போன்ற சிறுவர் இல்லங்களில் இருந்து ஆளுமை மிக்க இளைஞர்கள் உருவாகி சமூகத்திற்கு வந்தார்கள்.
இன்றும் ஆசிரியர்களாக, அரச அலுவலர்களாக உள்ள பலர் செஞ்சொலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை இல்லங்களில் கல்வி கற்று வளர்ந்தவர்கள். புலம்பெயர் தேசங்களிலும் அப்படி வளர்ந்த பலர் உள்ளார்கள்.
செஞ்சோலை வரலாற்றில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் நாள் மறக்க முடியாத ஒரு வடுவை ஶ்ரீலங்கா அரசு ஏற்படுத்தியது.
செஞ்சோலைப் படுகொலை செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ அனர்த்த முகாமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்ட பாடசாலை மாணவிகள்மீது இலங்கை அரசின் கிபீர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் 53 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் இனத்தின் வரலாற்றில் மிகப் பெரிய துயரமாக இனப்படுகொலையாக இந்த நிகழ்வு நினைவுகொள்ளப்படுகிறது.
ஒரே நாளில் தமிழர் தேசம் ஆளுமை மிக்க 53 மாணவிகளை இழந்து பெரும் அவலத்திற்கும் இழப்புக்கும் உள்ளானது. தாய், தந்தை இல்லாத அநாதரவுக் குழந்தைகளுக்காக எம் நிலத்தின் மகத்தான தலைவர் ஒரு கூடென செஞ்சோலையை உருவாக்கினார்.
ஆனால் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களை எந்த வகையிலேனும் அழித்துவிட வேண்டும் என்றிருந்த ஶ்ரீலங்கா அரசு அந்தச் செஞ்சோலைச் சிறார் இல்லம்மீதும் குண்டுகளைக் கொட்டி 53 மாணவிகளின் உயிரைக் காவு கொண்டது வரலாறாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 23 October, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.