அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனின் விவகாரத்தில் உதவ, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் முன்வந்துள்ளார்.
அனோஜனின் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியிலான தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஃபைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெருமா ஆகியோர் நஷீத்தை சந்தித்தபோது அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
மனிதாபிமான அடிப்படையில் உதவத்தயார்
இந்தச் சந்திப்பின்போது, அனோஜனின் நடத்தையை "கண்டிக்கத்தக்கது" எனக் கருதினாலும், மனிதாபிமான அடிப்படையில் அந்த இலங்கை நாட்டவருக்கு உதவத் தயாராக இருப்பதாக நஷீத் அந்த இரு சட்டத்தரணிகளிடமும் தெரிவித்தார்.

சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கான தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தியதைத் தொடர்ந்து, அவருக்கு நிவாரணம் தேடுவதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர முயற்சிகளை இலங்கை தீவிரப்படுத்தி வரும் வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவிப்பு
முஸ்தபா மற்றும் குமாரப்பெருமா ஆகியோர் இவ்வழக்கில் சட்ட உதவிகளை வழங்கவும், தங்கள் சொந்தச் செலவில் சவூதி அரேபியாவுக்குச் செல்லவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கிடைக்கக்கூடிய சட்டரீதியான தீர்வுகள் குறித்து ஆராய்வதற்காக, அவர்கள் அனோஜனின் சட்டப் பிரதிநிதிகள் மற்றும் சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனோஜன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளி என்பதால், இவ்வழக்கு தொடர்பான சட்டச் செலவுகளை அரசாங்கமே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |