செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மீள ஆரம்பமாகும் அகழ்வு பணிகள்
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (29.04.2025) யாழ்.மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் இடம்பெற்றது.
புதைகுழியை அகழ்வதற்கான நிதி மத்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ஆய்வுப் பணிகளை முன்னெடுத்த, மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவ இதுதொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
அதனால், அவர் எதிர்வரும் 3ஆம் திகதியளவில் அங்கு ஆரம்பக்கட்ட கள ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிந்துப்பாத்தி மயானத்தில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட 40 சிதிலங்களில் இரண்டு சிதிலங்கள் விலங்குகளின் என்புகள், ஏனைய அனைத்தும் மனித என்புத் தொகுதிகளுடன் தொடர்புடையவை என்ற விடயம் ஏற்கனவே நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
