சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நிலையத்தில் வெடிப்பு : மூவர் படுகாயம்
சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு உற்பத்தி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக மூவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்றைய தினம் (31) பிலியந்தலை மாவித்தபுரவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டவிரோத பட்டாசு உற்பத்தி
"பிலியந்தலை மாவித்தபுர பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி இடம்பெற்று வந்துள்ளது.
இந்த வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் பட்டாசு உற்பத்தி செய்ய தேவைப்படும் உற்பத்தி பொருட்கள் என்பனவும் காணப்படுகின்றன.
நாளை பிறக்கவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பட்டாசுகள் அனைவராலும் வாங்கப்படும் என்பதனால் அதிக எண்ணிக்கையான பட்டாசுகள் இந்த வீட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்த பட்டாசுகளை இன்று (31) காலை 7 மணியளவில் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இங்கு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தளபாடங்கள், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக" காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதற்காகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |