அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகள் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவும் அதிகரித்த வெப்பநிலையால் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தெரிவித்துள்ளார்.
இந்த வெப்பநிலை காரணமாக கண் சுகாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மருத்துவ நிபுணர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது அதிக வெப்பத்தினால் நீர் சத்து அதிகம் தேவை என்பதால் சிறியவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை தேவைக்கேற்ப நீரினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்களை பாதுகாத்துக் கொள்ளல்
அதிகரிக்கும் வெப்பநிலையால் வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கு காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் நடமாட வேண்டாம்.
அத்துடன் இக்காலப்பகுதியில் கண்ணீர் அதிகம் பயன்படுவதால் தொப்பி அணிவது, அங்கீகரிக்கப்பட்ட கண்ணடிகளை அணிவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

கண்களை கசக்குவது, கைகளை சவுக்கரமிட்டு கழுவுவது, கைகளால் தேவையற்ற முறையில் கண்களை தொடுவது உள்ளிட்ட விடயங்களை தவிர்ப்பதன் ஊடாக இவ்வாறான நிலைமைகளிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கண்கள் அதிகம் பாதிப்பு அடைந்தால் மாத்திரம் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை நாட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகின்ற தொற்று நோய்களோ கண் தொடர்பான தேவையற்ற பிரச்சினைகளோ உருவாகவில்லை, அது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |