யாழில் மறுக்கப்பட்ட அனுமதி :போராட்டத்தில் குதித்த கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழில் தடுக்கப்பட்டதை எதிர்த்து கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுண்டிக்குளம் - பூனைத் தொடுவாய் அண்மித்த பகுதியில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மறுக்கப்பட்ட அனுமதி
உழவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள வீஞ்சு முறையிலான கரைவலைத் தொழிலை மேற்கொள்ள கடந்த அரசு காலத்தில் நீரியல்வளத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது நீரியல்வளத் திணைக்களத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர்களும் சம்மாட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறி
ஜனாதிபதி குறித்த விடயத்தில் கவனம் செலுத்தி தமக்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் உடனடியாக நிறுத்தும் பட்சத்தில் பல கோடி ரூபாய் நட்டத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி நிர்க்கதியாக வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

நாம் கரைவலைத் தொழிலை மேற்கொள்ள முடியாதவாறு நூற்றுக் கணக்கான இந்திய கடற்றொழிலாளர்களது றோளர் படகுகள் சுண்டிக்குளம் கடற்கரையோரமாக ஆக்கிரமித்துள்ளன.அவற்றை கட்டுப்படுத்த முடியாத நீரியல்வளத் திணைக்களத்தினர் எமது வாழ்வாதாரத்தை தடுத்து நிறுத்துகின்றனர் என கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கூலித் தொழிலாளர்களாக நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர்கள்
புத்தளம் , உடப்பு பகுதிகளில் நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர்கள் கூலித் தொழிலாளர்களாக தொழில் செய்து வருகின்றனர்.

அத்துடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் எனப் பலரும் தொழில் புரிந்து வரும் நிலையில் தமக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |