வெள்ளத்தில் மூழ்கப்போகும் கண்டி : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எதிர்வரும் காலங்களில் கண்டி நகரம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அதுல சேனாரத்ன(Atula Senaratne) தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெய்த மழையினால் கண்டி நகரின் பல இடங்கள் பல தடவைகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தமை தொடர்பிலான விசாரணையின் போது, கண்டி நகரைச் சுற்றியுள்ள முறைசாரா நிர்மாணங்களால் இந்த வெள்ளம் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள்
மகாவலியுடன் கூடிய உயரமான இடத்தில் அமைந்துள்ள கண்டி நகருக்கு மழைநீர் மற்றும் ஏனைய கழிவு நீர் வெளியேறும் இரண்டு பிரதான கால்வாய்களை அடைக்கும் வகையில் முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் தெரிவித்தார்.
சிறு மழை பெய்தாலும் கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டி வில்லியம் கோபல்லாவ மாவத்தையிலிருந்து ஆரம்பமாகி கோதம்பையில் மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய், டி.எஸ்.சேனநாயக்க வீதி மூலையில் இருந்து ஆரம்பித்து கடுகஸ்தோட்டை அலி நாவனத்தோட்டை அண்மித்து மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய் ஆகிய இரண்டு கால்வாய்களும் இவ்வாறு மாறியுள்ளதாக பேராசிரியர் கூறினார்.
100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால்
கண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறுகிய காலத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மாநகரம் பெரும் சேதத்தை சந்திக்க நேரிடும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த பாரதூரமான நிலைமை தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |