ஹட்டனில் வனப்பகுதிக்குள் சிக்கிய வெளிநாட்டு மாணவி...!
ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு மாணவி ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் காவல் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை குழு இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மீட்கப்பட்ட மாணவி நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய லூனா டூகாட் எனும் ஒரு பல்கலைக்கழக மாணவி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உருகுணை பல்கலைக்கழக மாணவி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவி தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏனைய மாணவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்து உருகுணை பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி கற்று வருகின்றார்.
இதற்கிடையில், கல்விசார் ஆய்வுப் பணிக்காக தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டன் சிங்கமலை மலை உச்சியை ஏறுவதற்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில், நேற்று (06-04-2026) காலை, மலை உச்சியைப் பார்வையிடச் செல்வதாகக் கூறிவிட்டு வனப்பகுதிக்குள் சென்ற அவர், மீண்டும் திரும்புவதற்கான வழியைக் கண்டறிய முடியாமல் காட்டில் சிக்கியுள்ளார்.
இது குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹட்டன் காவல்துறையுடன் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹட்டன் காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், பெரும் முயற்சிக்கு மத்தியில் சிங்கமலைக் காடு ஊடாக மலை உச்சிக்குச் சென்று மாணவியை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |