சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டுத் தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபையின் விசேட பேருந்து சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், நீண்ட தூரப் பயணங்களுக்காக நாளாந்தம் மேலதிகமாக சுமார் 250 பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட பேருந்துகள் சேவை
அத்துடன் பயணிகளின் வருகைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகள் சேவையில் இணைக்கப்படும் எனவும் இந்த விசேட சேவை ஏப்ரல் 09 முதல் 13ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டுக்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக ஏப்ரல் 17 முதல் 21ஆம் திகதி வரை விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார் பேருந்து சேவைகளை ஒழுங்குபடுத்தும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், ஏப்ரல் 09ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
பயணிகளுக்கேற்ப போதுமான அளவு மேலதிக பேருந்து ஈடுபடுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட தொடருந்து சேவை
அதேநேரம், இலங்கை தொடருந்து திணைக்களம் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்பொழுதுள்ள சேவைகளுக்கு மேலதிகமாக, கடலோரப் பாதை, வடக்குப் பாதை மற்றும் பிரதான பாதை ஆகியவற்றில் பல விசேட தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் இலங்கை தொடருந்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |