மன்னருடனும் பேச்சுவார்த்தை: அனோஜனை விடுதலை செய்க! சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
மதங்களின் உண்மையான கோட்பாட்டை மதித்து சிவராசா அனோஜனை விடுதலை செய்க என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையை வதிவிடமாகக் கொண்ட சிவராசா அனோஜன் என்ற இளைஞர் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாமிய மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக ஓரிரு வசனங்களை எழுதினார் என்ற காரணத்திற்காக சவூதி அரேபிய நீதித்துறையால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
மதத்திற்கு அபகீர்த்தி
அனோஜன் என்பவருக்கு சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்கள் தெரியாத நிலையில் தான் எழுதுகின்ற எழுத்தில் ஒரு மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் என்று தெரியாத நிலையில், அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிப்பது என்பதை ஒரு மனிதாபிமான செயலாகக் கருத முடியாது.

அவர் எழுதியது தவறு என்று அறிந்தவுடன் தனது சமூக வலைதளத்திலிருந்து அதனை அகற்றியது மாத்திரமல்லாமல், அதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்த நிலையில், அவரது அறியாமையால் செய்த சிறிய தவறுக்கு மரண தண்டனைதான் தீர்ப்பா என்ற கேள்வி எழுகின்றது. சகல மதங்களுமே அன்பையும் சகிப்புத் தன்மையையுமே போதிக்கின்றன.
அறியாமல், தெரியாமல் செய்த தவறுகள் மன்னிக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றன. இவை அனைத்தையும் சவுதி நீதித்துறை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்.
இனப்படுகொலை
காசாவில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த உலக மக்களும் மொழி, மதம், இனம் கடந்து இத்தகைய மோசமான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு ஒருவரும் இல்லையா? இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா என்று தொடர்ந்தும் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றோம்.
அவர்களது மொழி, மதம் பற்றி நாங்கள் யாரும் சிந்தித்ததில்லை. அவர்கள் மனிதர்கள், தனது சொந்த மண்ணில் வாழும் உரித்துடையவர்கள்.

அவர்களை அழித்தொழிப்பதற்கு யாருக்கும் உரித்தில்லை என்பதை இன்னமும் திடமாக நம்புகின்றோம். அவ்வாறுதான் உலக மனிதகுலம் இருப்பதாக நம்புகின்றோம்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில், ஒரு சிறிய தவறுக்காக, மரண தண்டனை விதிப்பதென்பது நியாயமானதா? அந்த இளைஞனின் பெற்றோர் தமது வாழ்விற்காக அவரை நம்பியுள்ளனர். அவர் இல்லாவிட்டால் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்படும்.
சட்டங்களும் தண்டனைகளும் ஒரு மனிதனை திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். அவரை இல்லாமல் செய்வதால் குற்றங்கள் குறைந்துவிடாது.
எனவே இலங்கை ஜனாதிபதி அவர்களும் இலங்கை அரசாங்கமும் சவூதி அரேபிய அதிகாரிகளுடனும் அந்நாட்டு மன்னருடனும் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, அந்த இளைஞரை மரண தண்டனையிலிருந்தும் ஏனைய பொருளாதார தண்டனையிலிருந்தும் காப்பாற்றி மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |