யாழில் நான்கு புதிய மதுபான நிலையங்கள்! பொதுமக்களிடமிருந்து வலுக்கும் எதிர்ப்பு
யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில், கோப்பாய், சங்கானை, தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் குறித்த மதுபான நிலையங்களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதைத் தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற விவகாரம்
இந்த நிலையில், குறித்த மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், அதன் பின்னணியில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநரால் உள்ளூராட்சி மன்றப் பகுதிகளில் அமைக்கப்படும் கட்டடங்களுக்கு COC (Certificate of Conformity) சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன், தமது பகுதியில் அனுமதி கோரப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையம் பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், அதற்கான வியாபார உரிமத்தை பிரதேச சபை வழங்காது என தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |