யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா: மறைந்த நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் தனுஷ்காவிற்கு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான 'சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஒன்பது அமர்வுகளாக நடைபெற்று வரும் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்று (07.10.2026), இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் மாணவி தனுஷ்காவிற்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
கொடூரமாகச் சுட்டுப் படுகொலை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயின்று, சமூகத்தின் குரலாக ஒலித்த இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி அதிகாலை வேளையில், நடைமுறையிலிருந்த கடுமையான இராணுவ ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியில், அவரது வீட்டில் வைத்து பெற்றோரின் கண்முன்னாலேயே ஆயுததாரிகளால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அன்னாரின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு, யாழ். இந்துக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களான அவரது சக பாடசாலை நண்பர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது.
இந்நிதியத்தின் ஊடாக, யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இத்தங்கப் பதக்கம் வழங்கி வைக்கப்படுகின்றது.
மாணவி தனுஷ்காவின் நெகிழ்ச்சியான பதிவு
தமக்குக் கிடைத்த இந்த உயரிய விருது குறித்துப் பகிர்ந்துகொண்ட மாணவி தனுஷ்கா சஞ்ஜீவ, தனது உணர்வுகளைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

"சமூகத்தின் கண்ணாடியாகவும் மக்களின் குரலாகவும் திகழும் ஊடகங்களின் இயல்பையும், அதன் தாக்கத்தையும் எனக்கு ஆழமாகக் கற்றுத்தந்த ஊடகக் கற்கைகள் துறைக்கு முதற்கண் எனது நன்றிகள்.
விரிவுரையாளர்களின் வழிகாட்டல்களும், ஊடகத் துறைசார் ஆளுமைகளின் அனுபவப் பகிர்வுகளுமே எனது அறிவுப்புலத்தை மேலும் விஸ்தரிக்க உதவின. "எனது கல்விக்கும், இலட்சியப் பயணத்திற்கும் எப்போதும் உற்ற துணையாக நிற்கும் எனது பெற்றோர் மற்றும் கணவருக்கும், என்னை முன்னகர்த்திய ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
குறிப்பாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கத்திற்கான நிதியத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி, ஊடகத்துறையில் சாதிக்கும் மாணவர்களைக் கௌரவிப்பதற்குரிய உயர்ந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த ‘நிலா நிதியம்’ குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |