நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயடைத்த ரணில் அரசாங்கம்
சிறிலங்கா அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், “தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கான உத்திகள் குறித்த விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இது குறித்த கருத்துக்களை முன்வைக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகம் சீர்குலைப்பு
அனுமதி வழங்கப்படாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்க பல கருத்துக்களும் யோசனைகளும் இருந்தன.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அவற்றிற்கு பயப்படுவதால் அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் முற்றாக சீர்குலைக்கப்படுகிறது.
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்துச் சுதந்திரம் வழங்கப்படாத வேளை, அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகைகள் குறித்து பேசுவது பயனற்றது.
சிறிலங்கா அரசாங்கம் தேசிய சபையை அமைத்து அனைவரும் இணைந்து செயற்படுவோம் எனக் கூறியிருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பேச்சுச் சுதந்திரத்தை கொடுக்கவில்லை” என்றார்.
