சுதந்திர மக்கள் பேரவைக்குள் கருத்து வேறுபாடு : வெளியாகியுள்ள தகவல்!
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் பேரவைக்குள் தற்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதன்படி, அந்த கட்சியின் உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் தலைமையில் இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எல்.பீரிஸின் தலைமை
சுதந்திர மக்கள் பேரவையில் இருந்து குறித்த கூட்டணியில் இணையும் குழுவின் தலைவராக ஜீ.எல்.பீரிஸ் பொறுப்பேற்க உள்ளதாகவும், அதன் பிரதித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியின் இணை அழைப்பாளர்களாக பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் இணையாதிருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தீர்மானித்துள்ளார்.
ஐ.ம.ச தலைமையிலான கூட்டணி
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் லலித் எல்லாவல ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்காவின் தற்போதைய ரணில் ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியை இணைத்து கூட்டணி அமைக்கும் திட்டத்தை டலஸ் அழகப்பெரும மேற்கொண்டதாகவும் இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவரது கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தமது கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைய தீர்மானித்ததாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |