சிறிலங்காவிற்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் வழங்கிய உத்தரவாதங்கள்
சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும், அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிற்கான பயணம்

பபுவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து, நாடுதிரும்பும் வழியில், அவர் சிறிலங்காவிற்கு பயணித்தார்.
பபுவா நியூகினியாவிலிருந்து பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம், நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட தூதுக் குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பிரான்ஸ் அதிபரை வரவேற்றார்.
அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்த நிலையில், இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாலமும், 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களுக்கும் இடையே, பிராந்திய மற்றும் பூகோள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறிலங்கா விஜயம் தொடர்பில், பிரான்ஸ் அதிபர் தமது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில்
Le Sri Lanka et la France sont deux nations de l'océan Indien qui partagent un même objectif : un Indo-Pacifique ouvert, inclusif et prospère.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 28, 2023
À Colombo nous l’avons confirmé : forts de 75 ans de relations diplomatiques, nous pouvons ouvrir une nouvelle ère de notre partenariat. pic.twitter.com/ZUJsOMEYFp
"சிறிலங்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சபீட்சமான இந்து - பசுபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் இரண்டு நாடுகளாகும். கொழும்பில் அதனை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகள் ஒருமைப்பாட்டிற்கான வலுவான இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளன.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
2 மணித்தியாலமும் 9 நிமிடங்களும் என்ற குறுகிய நேரத்தில் சிறிலங்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர், இன்று (29) அதிகாலை 1.44 அளவில் நாட்டிலிருந்து வெளியேறியதாக, விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

இதேவேளை, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர்.
சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன், ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக, வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.