ஜனநாயக விரோதத்தை வெளிப்படுத்தும் அநுரவின் கருத்து: கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கம்
தமக்கு வாக்களித்தால் தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்து ஜனநாயக விரோதத்தை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அநுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தனர்.
திஸ்ஸ விகாரை விவகாரம்
இவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர்.
ஆனால் இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர்.
இனவாதத்தை தூண்டும் இந்த தேசிய மக்கள் சக்தி, தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காடுகின்றனர்.
முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு அவரது உண்மை முகத்தைக் காட்ட இரண்டு வருடம் தேவைப்பட்டது . ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்படுவிட்டது.
ஜனாதிபதியின் பிரசாரம்
குறிப்பாக முன்னவர்கள் இனவாதிகள். அதை அவர்கள் வெளிப்படையாகவே காட்டினர். ஆனால் இவர்கள் அதைவிட மோசமனவர்கள். மக்களை நம்பவைத்து தம்வசப்படுத்தி கழுத்தறுக்க முயற்சிக்கின்றனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் இருப்பை சூட்சகமாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாகவே முன்னெடுப்பதாக உள்ளது.
இது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் போக்காகவே இருக்கின்றது.
மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் அந்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேற்றாது மீண்டும் புதிய பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றது.
தமிழ் மக்களின் வாக்கு
இது தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடும் முயற்சியாக இருக்கின்றதே தவிர தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இதை எமது மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அத்துடன் இதன் வெளிப்பாட்டை உள்ளூராட்சித் தேர்தலிலும் வெளிப்படுத்த வேண்டும்.
அந்தவகையில் தமக்கு வாக்களித்தால்தான் பிரதேச சபைகளுக்கு நிதி விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் கருத்தானது ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா? ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
