உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி! கைது அச்சத்தில் கம்மன்பில
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அம்பலப்படுத்தும் தனது புத்தகம், மார்ச் 31 அன்று வெளியாவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் தன்னை மார்ச் 27 ஆம் திகதி சிறையில் அடைக்க முயற்சி செய்வதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(23) பேட்டியளித்த கம்மன்பில, அதற்கு முன்பாகத் தான் கைது செய்யப்படக்கூடும் என்பதால், புத்தகம் வெளியிடப்படாமல் போகலாம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் சுட்டிக்காட்டியதாக கூறியுள்ளார்.
தனது புத்தகம் வெளியாவதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் என்னைக் கைது செய்ய தயாராகி வருகிறது என்பது அமைச்சரின் கூற்றிலிருந்து தெளிவாகிறது என அவர் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை
கடந்த வாரம் நடைபெற்ற அரசாங்க ஊடக சந்திப்பின்போது, கம்மன்பிலவின் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி தொடர்பான கூற்றுகள் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்ததை தொடர்ந்தே கம்மன்பிலனவின் மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி என கூறப்படும் நபரை மாத இறுதிக்குள் வெளிப்படுத்துவதாக உதய கம்மன்பில கூறியிருந்த நிலையில், மார்ச் 27 அன்று விசாரணைக்கு வரவிருக்கும் வழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால், அவரால் சில உண்மைகளை வெளிப்படுத்த முடியும் என அமைச்சர் நளிந்த கூறியிருந்தார்.
இந்த நிலையில், கூறியபடி மார்ச் 27 அன்று தான் கைது செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சர் நளிந்தவுக்கு கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |