திருடனிடம் மீட்ட தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் போன்ற திருட்டுப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (29) மாலை கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வாழைச்சேனை காவல்துறை பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட விசாரணை
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை (28) கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த திருடன் திருடிய தங்க ஆபரணங்கள் பணம் என்பவற்றை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

இதன்போது திருடனின் வீட்டிற்கு வந்த ஆயித்தியமலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த காவல்துறை உத்தியோகத்தர், நான் தான் இந்த சம்பவத்தை விசாரணை செய்து வருவதாக கூறி திருடனிடம் இருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை வாங்கி எடுத்துக் கொண்டார்.
பின்பு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் அவரது நண்பர் ஒருவரிடம் அந்த திருட்டுப் பொருட்களை வைக்குமாறு கொடுத்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
இதனையடுத்து குறித்த காவல்துறை உத்தியோகத்தரை உதவி காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய சம்பவ தினமான நேற்று மாலை கைது செய்ததுடன் நண்பனிடம் கொடுத்து வைத்திருந்த திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரை வாழைச்சேனை நீதிமன்றில் இன்று (30) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |