உலகத்தவர்களிடம் கோட்டாபய விடுத்துள்ள அறைகூவல்
பாகிஸ்தான் - சியால்கோட்டில் மத நிந்தனை குற்றச்சாட்டில் இலங்கையர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசரமாக தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் இலங்கை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கலந்துரையாடியதாக தனது டுவிட்டரில் கூறிய இம்ரான் கான், சம்பவம் தொடர்பில் 100இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குத் தொடரப்படும் என உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனிதாபிமானமற்ற செயல் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி, மனித நேயமுள்ள உலகில் அனைவருக்கும் அது பாரிய அதிர்ச்சியாகும் எனக் கூறிய அவர், அடிப்படைவாதத்துக்கு எதிராக முழு உலகமும் ஒரே நோக்கத்துடன் நின்று செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.