தமிழர் விவகாரத்தில் கவனயீனமாக செயற்படும் அநுர தரப்பு: சாணக்கியன் சாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைக்கு கூறும்படியாக எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஒரு வருட பூர்த்தியில் ஜனாதிபதி என்ன செய்தார் என்று எவரேனும் கேள்வி எழுப்புவார்களாயின் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பில் இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காணி பிரச்சினை
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ சில பிரச்சினைக்கு ஒரு வருடத்தினுள் தீர்வு காணமுடியாது.
எனினும், குறுகிய காலத்தின் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினைகளையேனும் அரசாங்கம் தீர்க்கவில்லை.
மயிலத்தமடு மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தர தீர்வை வழங்கவில்லை.
இன முரண்பாடுகள்
இதற்கான முறையான வர்த்தமானியை அரசாங்க வெளியிட தாமதிக்குமாயின் இன முரண்பாடுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான அரசாங்கத்தின் தீர்வு திட்டமும் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மைதான நிர்மாணம் முன்னெடுக்கப்படும் காணியில் ஆயுதம் மீட்கப்படுகிறது, செம்மணியில் என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன, அதற்கான எந்த தீர்க்கமான தீர்மானங்களையும் அரசாங்கம் இதுவரையில் முன்வைக்கவில்லை.
2025 இல் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக கூறி, இன்று வரை அதற்கான சட்டத்தையேனும் நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவில்லை. அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதற்கும். புதிய அரசியலமைப்பை நிறுவுவதற்குமான பேச்சுவார்த்தைகளை கூட அரசாங்கம் ஆரம்பிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
