நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி
நாடு முழுவதும் செப்டெம்பர் மாதம் முதல் “GovPay“ விண்ணப்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவல்துறையினரால் வழங்கப்படும் அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க (Harsha Purasinghe) தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சரவை ஒப்புதல்
அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் புதிய நிகழ்நிலை போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை தொடங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சில வாரங்களுக்கு முன்பு, எங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தது. எனவே, இந்த மாதம் முதல் நாடு முழுவதும் அபராதங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் முறையை செயற்படுத்தத் தொடங்குவோம்.
இந்த மாத இறுதிக்குள் மேல் மற்றும் தென் மாகாணங்கள் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள காவல் நிலையங்களை இணைப்பதன் மூலம் முதல் கட்டத்தில் இதை அறிமுகப்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
அதன் பிறகு, மிக விரைவான திட்டத்தின் கீழ், செப்டெம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் உள்ளடக்கி நேரடியாக அபராதம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

