ரன்சொம்வெயர் தாக்குதலால் மாயமானது சிறிலங்கா அரசின் மின்னஞ்சல்கள் தரவுகள்
அதிபர் அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு போன்றவற்றின் கீழ் உள்ள அரச அலுவலகங்களினுடைய சில தரவுகள் ரன்சொம்வெயர் (ransomware) தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் (2023) மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு இடையிலான தரவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
“gov.lk” என்ற மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தி சில அரசாங்க அலுவலகங்களின் பல முக்கியமான தரவுகள் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளர் சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
தரவுகளின் இழப்பு
“mail@gov.lk” என்ற மின்னஞ்சல் டொமைனைப் பயன்படுத்தி, சிறிலங்கா அரசாங்க வலையமைப்பினூடாக அரசாங்கத்தின் முக்கியமான தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் தரவுகளின் இழப்பைத் தடுப்பதற்காக இரண்டு வழிமுறைகளை அடையாளம் கண்டு அவற்றை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பத் டி சில்வா குறிப்பிட்டார்.
அதுமாத்திரமல்லாமல் சிறிலங்காவின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமானது சிறிலங்காவின் கணினி அவசர தயார்நிலை குழுவுடன் இணைந்து இழந்த தரவுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.