இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் - யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தாயகம் திரும்புவதற்கு அனுமதி
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.
தேவையான காணி
அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening