செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் அரசாங்கம் தலையிடாது : அமைச்சர் அறிவிப்பு
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு தலையிடாது. ஆனால், காவல்துறை விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் அரசின் தலையீடு தேவையற்றதாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை குறித்து அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்துக்கே அறிவிக்கப்படும்.
நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான வசதிகள் அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விசேட குழுவொன்றினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மறுபுறம் காவல்துறை விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு அதற்கான தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு நாம் இடமளித்திருக்கின்றோம். அதற்கமைய அந்த விவகாரத்தில் நியாயமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நம்புகின்றோம்." என தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில் செம்மணிக்கு சுயாதீன விசாரணைப் பொறிமுறையை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நிபுணத்துவத்தின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
