ஈழத்தில் மாற்றுத் திறனாளிகள் இனப்படுகொலையின் சாட்சிகள்…
ஈழத் தமிழ் நிலத்தில், எல்லா வகையிலும் நடந்த இனப்படுகொலையின் சாட்சிகளால் நிறைந்தே இருக்கிறது. போரில் அங்கங்களை இழந்து நம் கண் முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், நடந்த இனப்படுகொலைப் போரின் சாட்சிகளாக கொள்ளப்பட வேண்டியவர்கள்.
எங்கள் நகரங்களில் கைகளை இழந்தவர்களும், கண்களை இழந்தவர்களும் கால்களை இழந்தவர்களும் தினமும் விலத்திச் செல்கின்றனர். போரின் காயத் தழும்புகள் நிறைந்த சனங்களைக் கண்டபடிதான் வாழ்கிறோம்.
போரால் எல்லாமும் நிர்மூலமாக்கப்பட்ட மண்ணில், மனக்காயங்களுடனும் உடல் காயங்களுடனும் வாழ்கின்ற மனிதர்களால் ஈழம் நிரம்பியிருக்கிறது.
உலக மாற்றுத் திறனாளிகள் தினம்
டிசம்பர் 3ஆம் திகதி உலக மாற்றுத் திறனாளிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உலகம் எங்குமுள்ள மாற்றுத் திறனாளிகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கான உரிமைகளையும் மேன்மைகளையும் வழங்கும் நோக்கில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
பன்னாட்டு அமைப்பான ஐ.நா 1981ஆம் ஆண்டை உலக மாற்றுத் திறனாளிகள் ஆண்டாக அறிவித்திருந்தது. அத்துடன் 1991ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3ஆம் நாளை உலக மாற்றுத் திறனாளிகள் நாளாக ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ளதுடன் ஆண்டுதோறும் இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் குறித்த கவனமும் விழிப்புணர்வும் வலியுறுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசாங்கமும், சேவை வழங்கும் நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், இவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் முதன்மை நோக்காகும்.
1991ஆம் ஆண்டில் இருந்து உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகின்ற போதும்கூட, உலகில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான மேன்மைகளை இந்த நாள் வலியுறுத்தினாலும் நடைமுறையில் அது தோல்வியில்தான் இருக்கிறது.
அரசுகள் மாற்றுத் திறனாளிகளை மறக்கின்றனவா?
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகள் ஒன்றிணைந்த ஒரு அரசாக கொள்ளப்பட வேண்டிய பன்னாட்டு நிறுவனமாகும். அந்த அடிப்படையில் ஐ.நா பிரகடனப்படுத்திய ஒரு தினத்தை உலக நாடுகள் யாவும் முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அந்நாடுகளின் கடமையாகும்.
ஆனால் மாற்றுத் திறனாளிகள் தினத்தை பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாத்திரமே கொண்டாடுகின்றன அல்லது நினைவுபடுத்துகின்றன என்றும் அரசுகள் இந்த நாளை பெரும்பாலும் மறந்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுவே மாற்றுத் திறனாளிகள் குறித்த அரசின் கரிசனையா என்றும் கேள்வி எழுகிறது.
என்ற போதும்கூட சில நாடுகளில் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த நாளை தவறாமல் அனுஷ்டித்து வருகின்றன. மாற்றுத் திறனாளிகளின் நிலையைப் புரிய வைத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் மாற்றுத் திறனாளிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள் என்பன ஊடகங்கள் வாயிலாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளை பெற்றுக் கொடுக்கின்ற முயற்சிகள் இடம்பெறுவதையும் அவதானிக்க முடிகிறது.
மதிக்கப்படுகின்றனரா மாற்றுத்திறனாளிகள்?
இப்படி மாற்றத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகின்ற போதும் கூட உண்மையிலேயே சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் மதிக்கப்படுகின்றனரா என்பதை குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.
மாற்றுத் தினாளிகள் குழந்தைப் பருவம் முதல் பல்வேறு அவமதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்களின் குறைபாடுகளை பெரும்பாலான சமூகங்கள் கேலியாகவும் அடையாளமாகவும் சொல்லி மனநிலைகளை பாதிக்கச் செய்வதையும் கண்டு வருகின்றோம்.
மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளைக் கொண்டே அவர்களுக்கு கேலியான பெயர்களைச் சூட்டுவதையும் சராசரி வாழ்வில் காண்கிறோம்.
குறிப்பாக சினிமா சூழலில் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கின்ற அணுகுமுறைகள் நிறைந்துள்ளன. அதிலும் தமிழ் சினிமா சூழலில் இது இன்னமும் அதிகமாக உள்ளது. குறைபாடுகளை வைத்து நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, குறைபாடுகளைக் கொண்டு பெயர் சூட்டுவது என்று சினிமாவில் இத்தகைய வெளிப்பாடுகளை மேற்கொள்வதுதான் சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறித்த கேலிப் போக்குகளை விதைக்கின்றது.
இதேவேளை மாற்றுத் திறனாளிகளின் மேன்மையையும் உயர்வையும் சித்திரிக்கின்ற பெயர் சொல்லக் கூடிய சில திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. அவர்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையிலும் சினிமாத்துறையில் படங்கள் உருவாகுவது மாற்றுத் திறனாளிகள் குறித்த நல்ல புரிதலை உருவாக்கும்.
சாதிக்கும் மாற்றுத் திறனாளிகள்
கிளிநொச்சியில் போரில் இரு கைகளையும் ஒரு கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர், ஒரு சராசரி மனிதன் செய்கின்ற அத்தனை வேலைகளையும் செய்வதுடன், அதனைக் கடந்தும் உழைத்து வருவதைக் காணமுடிகின்றது.
எழுத்தாளர் வெற்றிச்செல்வி போரில் ஒரு கண்ணையும் ஒரு கையையும் இழந்தவர். ஆனால் அவர் தன் எழுத்துக்களால் ஆற்றும் பணி என்பது ஆயிரம் கைகளாலும் ஆயிரம் கண்களாலும் செய்கின்ற பணிக்கு ஒப்பானது. இதைப் போல ஈழத்தில் போரில் மாற்றுத் திறனாளிகள் ஆக்கப்பட்ட பலர் சாதித்து வருகின்றார்கள்.
இதேவேளை, எமது சூழலில் பல பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். போரில் குழந்தைப் பருவத்தில் கை, கால்களை இழந்து, கண்களை இழந்து இன்றும் மாணவர்களாக கல்வி கற்று வருகிறார்கள். போரில் இரு கால்களையும் இழந்த பல பல்கலைக்கழக மாணவர்களை பல்கலைக்கழத்தில் சந்தித்திருக்கிறேன்.
அவர்களில் சிலர் மருத்துவர்களாகவும் வந்துள்ளனர். போரில் அங்கங்களை இழந்த பிறகும்கூட தளராத நம்பிக்கையுடன் கல்வி கற்று, பல்கலைக்கழகம் சென்று இப்போது உத்தியோகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இனப்படுகொலையின் சாட்சிகள்
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஐ.நா ஈழம் போன்ற நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் உருவாக காரணமாகவும் இருந்திருக்கின்றன. ஈழத்தில் போர் நடந்த காலத்தில் அந்தப் போரை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தனது பணியை செய்யத் தவறியுள்ளது.
இதனை பின்னர் ஐ.நா பொதுச்செயலாளரே ஒப்புக்கொண்டதையும் நாம் அறிவோம். மிகக் கடுமையான இனப்படுகொலைப் போர் ஒன்றை உரு தேசம் சந்திக்கின்ற போது அங்கு மிகப் பெரும் உயிரிழப்புக்களையும் அங்க இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.
எனவே மாற்றுத் திறனாளிகள் உருவாகக்கூடாது என்றால் போரை அங்கு தடுக்க வேண்டும். கொத்துக் குண்டுகளின் பாகங்களைச் சுமந்தபடி கை, கால்களின்றி வாழ்கின்ற மனிதர்களையும் ஈழ மண்ணில் காணுகிறோம்.
ஈழ மண்ணைப் பொறுத்தவரையில் இனப்படுகொலைபப் போரில் உயிர் தப்பிய அந்த மாற்றுத் திறனாளிகள் போரில் இருந்து எஞ்சியவர்கள். ஈழ மண்ணில் உரிமையும் விடுதலையும் சுதந்திரமும் வேண்டி போராடிய மக்கள்மீது மிகக் கொடூரமாக இனப்படுகொலைப் போர் நடாத்தப்பட்டது. அந்தப் போரின் தடயங்களாக சாட்சிகளாக மாற்றுத் திறனாளிகள் நம் கண்களுக்கு முன்னால் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 04 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.