இந்தியா - கனடா இடையே விரிசல்! பழிக்கு பழி அடிப்படையில் ராஜதந்திரிகள் வெளியேற்றம்
புதிய இணைப்பு
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், டிட்-ஃபோர்-டாட் (Tit-For-Tat) என்ற பழிக்கு பழி நடவடிக்கைகளின் அடிப்படையில் ராஜதந்திரிகளை, தமது நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன.
இந்தநிலையில், ஜப்பான் மற்றும் சூடானுக்கான முன்னாள் தூதரான சஞ்சய் குமார் வர்மா ஒரு மரியாதைக்குரிய தொழில் தூதர் என்றும் அவர் மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியது மற்றும் அவமதிப்புக்குரியது என்று புதுடில்லி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீக்கிய பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட விடயத்தில், தனது உயர்ஸ்தானிகர் மற்றும் பிற அதிகாரிகளை விசாரணை செய்வதாக ஒட்டாவா கூறியதை அடுத்து, புதுதில்லியில் உள்ள கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ராஜதந்திரிகளை எதிர்வரும் சனிக்கிழமைக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா நேற்று கேட்டுக் கொண்டது.
அத்துடன், தற்போதைய நிலையில் இந்திய ராஜதந்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில்; கனேடிய அரசாங்கத்தின மீது நம்பிக்கையில்லை. எனவே, கனடாவுக்கான தனது உயர்ஸ்தானிகரையும் இலக்கு வைக்கப்பட்ட அதிகாரிகளையும் திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் இந்தியா அறிவித்தது.
இதற்கு மத்தியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கனடா கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கான ஆதாரங்களை தமது நாட்டு காவல்துறையினர் சேகரித்துள்ளதாக கூறியே, கனடாவும் இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்ட 6 ராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.
முன்னதாக, புதுடில்லியில் உள்ள கனடாவின் ராஜதந்திரியை நேற்று அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, கனடாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிற அதிகாரிகளின் மீதான அடிப்படையற்ற இலக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருந்தது.
சீக்கிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் ஒட்டாவாவின் குற்றச்சாட்டுகளை இதன்போது இந்தியா வலுவாக நிராகரித்தது.
முன்னதாக, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் -- 1997 இல் கனடாவில் குடியேறி, 2015 இல் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர் -- இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட காலிஸ்தான் எனப்படும் தனி சீக்கிய மாநிலத்திற்காக அவர் போராட்டங்களை நடத்தி வந்தவராவார்.
பயங்கரவாதம் மற்றும் கொலை சதி குற்றச்சாட்டுக்களுக்காக அவர் இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவராவார்.
இந்தநிலையில், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஸ் கொலம்பியாவின் சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கும் இந்திய முகவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ட்ரூடோவின் கனேடிய அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனினும், அதனை அபத்தமானது என்று புதுடில்லி நிராகரித்து வருகிறது.
இரண்டாம் இணைப்பு
இராஜதந்திர முறுகலின் மற்றுமொரு நகர்வாக, இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ஆறு இராஜதந்திரிகளை கனடா (Canada), இன்று(14) தமது நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.
இந்தியா, கனடாவுக்கான தமது உயர்ஸ்தானிகரை கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்த நிலையிலேயே கனடாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் செயற்பட்டமைக்கான ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்த பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் கனடாவில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் குறித்த கணிசமான அளவு தகவல்கள் தங்களிடம் இருப்பதாக கனேடிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், கனடாவை தளமாகக் கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என்றும் ரோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம், தமது நாட்டிலுள்ள அதிகாரிகள் மூலம் தகவல்களைச் சேகரித்து வருகிறது. அத்துடன் இந்தத் தகவல்கள் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைக்க இந்திய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது என்றும் கனேடிய பொலிஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னதாக, 2023இல் சீக்கிய தீவிரவாதி நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவை கனடா குற்றம் சுமத்தியிருந்தது.எனினும், இந்தியா அதனை மறுத்து வந்தது.
இந்தநிலையில், இந்தியாவின் உயர்ஸ்தானிகர் உட்பட்டவர்களை, விசாரணையின் பகுதியாக கனடா பார்ப்பதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியா தமது உயர்ஸ்தானிகரை இன்று கனடாவில் இருந்து திருப்பியழைப்பதாக அறிவித்திருந்தது.
முதலாம் இணைப்பு
கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திருப்பியழைக்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று கனடா அறிவித்ததற்கு பதிலடியாக இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்ததுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை
கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் திருப்பியழைப்பட்டதை அறிவிக்கும் அறிக்கையில்,
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ "வாக்கு வங்கி அரசியல்" செய்வதாகவும், கனேடிய மண்ணில் பிரிவினைவாத கூறுகளை சமாளிக்க தேவையானவற்றை செய்யவில்லை என்றும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும் நிஜ்ஜார் கொலையில் இந்தியா ஈடுபட்டதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் கனேடிய அரசாங்கம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு கடுமையான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிற இராஜதந்திரிகள் அந்நாட்டில் நடத்தப்படும் விசாரணை தொடர்பான விவகாரத்தில் 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று கனடாவில் இருந்து எங்களுக்கு நேற்று இராஜதந்திர தகவல் கிடைத்தது.
இந்திய அரசாங்கம் இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிக்கிறது.
வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்ட ட்ரூடோ அரசாங்கத்தின் அரசியல் இது என கூறியுள்ளது.
இந்தியா - கனடாவுக்கும் இடையிலான உறவு
கடந்த ஆண்டு செப்டம்பரில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய மண்ணில் காலிஸ்தானி அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்க முகவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியபோது, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது.
அந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று மத்திய அரசு நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக சில காலம் விசா சேவைகளும் நிறுத்தப்பட்டது.
இந்திய உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா, பலதுறைகளில் பணியாற்றி, நீண்ட அனுபவம் கொண்ட மூத்த முக்கியமான அதிகாரி ஆவார்.
ஜப்பான், சூடான், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவின் சிறப்பு துாதராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் என்பதுடன் அவருக்கு அரசுத் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.
சமீபத்தில் லாவோஸ் நாட்டிற்கு ஆசியான் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்த போதுகூட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரு தரப்பு உறவு குறித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், கனடா எங்களது அதிகாரிகளை ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதாகவும், தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை நியாயப்படுத்த மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கனடாவில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் வைத்து 2023 ஜூன் 18ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவின் தொடர்பு குறித்து தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வரும் கனேடிய காவல், இந்தியர்கள் சிலரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |