அதிகரித்துள்ள வெப்பநிலை: பவளப்பாறைகள் அழிவடையும் அபாயம்
நாட்டில் தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கைக் கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிவடையலாம் என சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி.கே.அருளானந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பவளப்பாறைகள்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கடலில் வெப்பநிலை (31)டிகிரி செல்சியஸாக அதிகரித்து, இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது.
நாட்டிலுள்ள பவளப்பாறைகளின் நிலை குறித்து நாரா எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை, ஆனால் பவளப்பாறைகள் நிறத்தை இழந்து அழிவடையும் என்பதை நிராகரிக்க முடியாது.
பவளப்பாறைகள் உருவாக கடலின் வெப்பநிலை (27-28) டிகிரி செல்சியஸ் வரை ஏற்ற இறக்கமாக இருக்க வேண்டும்.
கடல் உயிரினங்களுக்கும் பாதிப்பு
கடல்நீரின் வெப்பம் வழக்கத்தை விட அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் தமது நிறத்தை இழந்து வெளுக்கத் தொடங்குகின்றன. இதன் மூலம் பவளப்பாறைகளின் அழிவைத் தெரிந்து கொள்ள முடியும்.
பவளப்பாறைகள் அழிந்தால் அதைச் சார்ந்து வாழும் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |