இலங்கையிலிருந்து விரைவில் ரஷ்யாவிற்கு அரச தூதுக்குழு: வெளியாகியுள்ள தகவல்
இலங்கையிலிருந்து (Sri Lanka) விரைவில் ரஷ்யாவிற்கு (Russia) தூதுக்குழுவை அனுப்புமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய (Tharaka Balasuriya) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் தூதுவர் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவை அனுப்புமாறு ரணில் பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடுகள்
இதனையடுத்து ரஷ்யாவுக்குச் சென்றவர்களின் தகவல்களை சேகரிக்க பாதுகாப்பு அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கம் தற்போது செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Premitha Bandara Tennakoon) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கை
இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்ததாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் (Udayanga Weeratunga) இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், அரசாங்கத்தின் தேவையின் அடிப்படையில் இந்தப் போர்வீரர்களை அழைத்து வர தலையிட முடியும் எனவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |