மன்னாரில் சட்டவிரோத விவசாயம்: முன்னெடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
மன்னார் கட்டுக்கரை குளத்தினுள் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்பதை சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சிலர் கட்டுக்கரை குளத்தினுள் குடியிருப்புக்களை அமைத்தும், விவசாய செய்கையினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்றில் வழக்கு
இந்நிலையில், குறித்த செயற்பாட்டை நிறுத்த கோரி மன்னார் மாவட்ட அரச திணைக்களங்களிடம் பல்வேறு முறைப்பாடுகளை மேற்கொண்ட நிலையில் அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 17 விவசாய அமைப்புக்கள் இணைந்து வழக்கு ஒன்றை மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் (17.10.2025) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு தொடுனர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், “ கட்டுக்கரை குளம் சம்பந்தமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்திலே, 17 விவசாயச் சங்கங்கள் தாக்கல் செய்த மனு ஒன்று இப்பொழுது நிலுவையிலே உள்ளது.
அந்த மனுவிலே, குளத்துக்குள்ளேயே சிலர் அநாகரிகமாக விவசாயம் செய்கிறார்கள், அவர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்க நிறுவனங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 17 விவசாய சங்கங்கள் சார்பிலே எழுத்தாணை வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் உறுதி
அந்த வழக்கு இரண்டு மூன்று தடவைகள் நீதிமன்றத்திலே அழைக்கப்பட்ட பின்னர் கடந்த தினத்திலே அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரச தரப்பிலே சட்டமாதிபர், அரச திணைக்களங்களின் சார்பாக முன்னிலையாகியிருந்த போது, அந்த நிவாரணங்களைத் தாங்கள் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.
அதாவது, அந்தக் குளத்துக்குள்ளே குடியிருக்கிறவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை தாம் எடுப்போம் என்று மன்றிற்கு உறுதியளித்து, அதனுடைய முன்னேற்றத்தை அதாவது அவர்களுடைய நடவடிக்கைகளுடைய முன்னேற்றத்தை டிசம்பர் முதலாம் திகதி மன்றிற்கு தெரியப்படுத்துவதாக கூறியிருக்கிறார்கள்.
வழக்கு டிசம்பர் முதலாம் திகதி நீதிமன்றத்திலே அழைக்கப்படும் போது எத்தனை பேரை வெளியேற்றியுள்ளார்கள் இன்னமும் எத்தனை பேர் வெளியேற்றப்பட உள்ளார்கள் என்ற விவரங்களை சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.
மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் தொடர்சியாக விவசாய செய்கைக்கான நீர் விநியோகம் இடம்பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கைக்கு தேவையான நீர் கட்டுகரை குளத்தில் இருந்து விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
