ஐந்தாவது தவணைக்கு ஆயத்தமாகும் ஐஎம்எப்! இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் அளவீடுகளுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிறைவேற்றுகுழுவின் ஒப்புதல்
அத்துடன், கடன் மறுசீரமைப்பில் போதுமான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, பலதரப்பு பங்காளிகளின் நிதி பங்களிப்புகள் பாதுகாக்கப்படுவதையும், நிதி உத்தரவாதங்களின் மதிப்பாய்வு நிறைவடைவதையும் இலங்கை உறுதி செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த இரு நிபந்தணைகளும் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்றுகுழுவின் ஒப்புதலுக்காக இந்த மதிப்பாய்வு சமர்ப்பிக்கப்படும்.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, நிறைவேற்றுகுழுவின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இலங்கைக்கு 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.
இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பெறும் மொத்த நிதி உதவி சுமார் 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக உயரும்.
இலங்கையின் பொருளாதார மீட்சி
சர்வதேச நாணய நிதியத்தின் உடனான பேச்சுவார்த்தைகள் ஸ்திரமான பாதையில் செல்கின்றன என்பதைக் காட்டினாலும், 2026 வரவு செலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவது அரசாங்கத்திற்குள் சவால்களை ஏற்படுத்தலாம்.
அதே சமயம், கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து, நிதி உத்தரவாதங்களை உறுதிப்படுத்துவது என்பது பன்னாட்டுப் பங்காளிகளிடம் தங்கியுள்ள ஒரு கடினமான இராஜதந்திரப் பணியாகும். மறுபுறம் இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதே, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அடுத்த படிக்கு அத்தியாவசியமாகும்.
நவம்பர் 7 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் சமர்பிக்க உள்ள நிலையில் இந்த இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
