யாழ்ப்பாணம் நல்லூரில் மாவீரர்களின் கல்வெட்டுக்கள் அங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இன்று இரவு 7 மணியளவில் கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவாலயம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
நவம்பர் 27ஆம் திகதி வரை அஞ்சலி
குறித்த நினைவாலயம் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

1982 ஆம் ஆண்டு முதல் விடுதலை அமைப்பில் இணைந்து விதையாகியவர்களின் விபரங்களுடன், தனிக்குழுக்களாகவும், ஈரோஸ் அமைப்பிலிருந்தும், எல்லை வீரர்களாகவும், உதவி வீரர்களாகவும், நாட்டுப்பற்றாளர்களாகவும், மாமனிதர்களாகவும் விதையாகிய உறவுகளின் விபரங்களையும் உள்ளடக்கி இவ் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆவணப் பெட்டகமாக உருவாக்கப்பட்டுள்ள வளாகம்
67 நினைவுக் கல்லறைகளில் 28,341 வீரர்களின் பெயர் விபரங்களும், அவர்களுக்குரிய தனித்துவ அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன், மாவீரர் நாள் வரலாறு, துயிலுமில்ல வரலாறு, துயிலுமில்லங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் பல்வேறு புள்ளிவிபரங்கள் எனப் பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஆவணப் பெட்டகமாகவும் இவ் வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் தமது பிள்ளைகளின் புகைப்படங்களைப் பொதுமக்களின் அஞ்சலிக்காகக் காட்சிப்படுத்துவதற்கான வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








