அதிகரிக்கும் சீனப் பிரசன்னம் - இந்திய புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்
இலங்கையில் அதிகரித்துவரும் சீனர்களின் பிரசன்னம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து, புலம்பெயர் தமிழர்கள் சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
லண்டனில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை எனவும், இலங்கை மீதான செல்வாக்கை இந்தியா இழந்துள்ளதாகவும் புலம்பெயர் தமிழர்கள் கூறியதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களை மேற்கோள்காட்டி த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சீனா இலங்கையில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்துள்ளதாக இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் தமக்கு உதவியாக இருக்கும் என்பதன் அடிப்படையில் சீனா இதனை வரவேற்கும் என புலம்பெயர்ந்த மக்கள் கருதுகின்றனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கூறியுள்ளன.
வட இலங்கையில் சீனர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி இருப்பதற்கு அவர்கள் இத்தகைய முயற்சிகளை வரவேற்பார்கள் என புலம்பெயர் தமிழர்கள் கருதுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவில் உள்ள தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதால், சீனாவின் உதவியை கோருவதற்கு கூட்டத்தில் பங்கேற்ற ஏனையவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் இந்திய புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.