இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: முன்னிலையில் இந்தியா

Shadhu Shanker
in கிரிக்கெட்Report this article
நடைபெற்று வரும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 175 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதல்நாள் ஆட்டம்
இதற்கமைய, முதல் இன்னிங்சில் 246 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்ததது. இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்றார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் அதிரடி
இவர்கள் இருவரும் இணைந்து 80 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில் ரோகித் சர்மா 24 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக சுப்மன் கில் களமிறங்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 119 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
ஜெய்ஸ்வால் 76 ஓட்டங்களும், கில் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம்
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 80 ஓட்டங்களிலும், கில் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் அணியை முன்னிலைக்கு எடுத்து செல்ல ஸ்ரேயஸ் ஐயர் 35ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஜடேஜா களமிறங்கினார்.
இதனை தொடர்ந்து ராகுலும் ஆட்டமிழக்க கே எஸ் பரத் மற்றும் ஜடேஜா சிறப்பாக விளையாடி அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றனர். எனினும் 41 ஓட்டங்கள் பெற்று கே எஸ் பரத் ஆட்டமிழக்கஅக்சர் படேல் களமிறங்கினார்.
அபாரமாக விளையாடிய ஜடேஜா
ஜடேஜா 81 ரன்களிலும், அக்சர் படேல் 35 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இதற்கமைய, 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ஓட்டங்கள் பெற்று இங்கிலாந்து அணியை விட 175 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
