டாம் ஹார்ட்லியின் சுழலில் சிக்கிய இந்தியா: முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ஓட்டங்கள் பெற்றது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது.
190 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்கள் எடுத்து 126 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் போப் 148 ஓட்டங்களும், ரெகன் அகமது 16 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
4ம் நாள் ஆட்டம்
இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று(28) நடைபெற்றது.
இதில் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 102.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 420 ஓட்டங்கள் பெற்றது. இதையடுத்து இந்திய அணிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து 42 ஓட்டங்கள் பெற்றநிலையில் ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
சிறப்பான பந்துவீச்சு
இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சால் ரோகித் சர்மா(39), கில்(0), கே.எல்.ராகுல்(22), அக்சர் படேல்(17), ஜடேஜா(2) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ( 13) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரீகர் பரத் - அஸ்வின் இருவரும் இணைந்து சிறிது நேரம் விளையாட அஸ்வினும் ஆட்டமிழந்தார். இந்நிலையில் 64.3 ஓவர்களில் 202 ஓட்டங்கள் பெற்று இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து சார்பில் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |