ஆப்கானை வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்தது இந்தியா
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆப்கான் அணி சார்பில்
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 08 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அணித்தலைவர் Hashmatullah Shahidi 80 ஓட்டங்களையும் Azmatullah Omarzai 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
35 ஓவர்கள் நிறைவில் கிடைத்த வெற்றி
அதன்படி, 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 131 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். மேலும், இன்றைய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா இரண்டு உலக சாதனைகளை முறியடித்திருந்தார்.
ரோஹித் சர்மா இரண்டு உலக சாதனை
உலகக்கிண்ணத் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.
1983-இல் நடந்த உலககிண்ண போட்டியில் கபில் தேவ் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 72 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அந்த சாதனையே தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஷான் கிஷன் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 55 ஓட்டங்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.