இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய மருத்துவர் பணி நீக்கம்!
வலுவடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய மருத்துவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருவர் சுனில் ராவ். இவர் இந்தியாவில் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து ஹமாஸுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவுமே சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையின் முடிவு
மேலும் இவரது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியதோடு மத ரீதியிலான சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய ராயல் பஹ்ரைன் மருத்துவமனை அதிரடியான முடிவொன்றினை எடுத்ததோடு, செய்தி குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளது.
"இங்கு பணிபுரியும் மருத்துவர் சுனில் ராவ் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிந்தோம். அவரின் கருத்துக்கள் முழுவதும் தனிப்பட்டவை.
அதற்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கூறிய கருத்துக்கள் மருத்துவமனை கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால், சுனில் ராவை உடனடியாக வேலையிலிருந்து நீக்குகிறோம்" என அந்த செய்தி குறிப்பில் பதிவிடப்பட்டுள்ளது.
— RoyalBahrainHospital (@RBHospital) October 19, 2023
மருத்துவர் சுனில்ராவ்
பணி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர் சுனில்ராவ் மன்னிப்பு கேட்டு பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
"நான் கூறிய சர்ச்சையான கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நாட்டினுடைய மக்களையும், மதத்தையும் நான் நேசிக்கிறேன். ஒரு உயிரைக் காப்பாற்றுவது மருத்துவராக எனது கடமை.
நான் இந்த மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன்" என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
