இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் இந்தியக் கடற்படைக் கப்பல்
16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு மாலுமிகளுடன் ‘ஐஓஎஸ் சாகர்’ (IOS Sagar) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தியக் கடற்படைக் கப்பல் சுனைனா (INS Sunayna), கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்தியக் கடற்படையின் நட்புறவுப் பாலங்களை கட்டியெழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் இன்று (15) நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐஓஎஸ் சாகர் கப்பலானது, இந்தியக் கடற்படைப் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்பட்ட கூட்டுத் துறைமுகப் பயிற்சிகளைத் தொடர்ந்து, கடந்த மாதம் 2 ஆம் திகதி மும்பையிலிருந்து தனது கடல்சார் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
பன்னாட்டுக் குழுவினர்
இதில் பங்களாதேஷ் , இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாபிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய பன்னாட்டுக் குழுவினர் வருகை தரவுள்ளனர்.

கடற்படை வீரர்களுக்குக் கடலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடல்சார் கலை மற்றும் வழிசெலுத்தல், தொடர்பு நடைமுறைகள் மற்றும் கடலில் உயிர்ப் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாடு, கப்பல்களைச் சோதனையிடுதல் மற்றும் அதிரடியாகக் கைப்பற்றுதல் போன்ற சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முக்கிய இடங்களுக்கும் விஜயம்
கொழும்பு வருகையின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி இலங்கை கடற்படையின் மூத்த அதிகாரிகளான மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் கடற்படைப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.

மேலும், பன்னாட்டு மாலுமிகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொழில்முறை ஆலோசனைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கையின் முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த முயற்சியானது ‘ஒரே கடல், ஒரே பணி’ என்ற இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பார்வையை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |