இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைச்சர்கள் கொழும்பில்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நாளை(11) ஆரம்பிக்கவுள்ள இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமர்வில் பங்கெடுப்பதற்காக வெளிவிவகார அமைச்சர்கள் உட்பட்ட அனைத்துலக பிரமுகர்கள் கொழும்பிற்கு வருகை தந்துள்ளனர்.
இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர எல்லை நாடுகளைச் சேர்ந்த 16 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் சிறிலங்காவில் கூடுவது ஒரு முக்கியமான சந்திப்பாக மாறியுள்ளது.
சிறிலங்காவுக்கு முக்கிய அமர்வு
இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்துக்கு 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான தலைமைப் பதவியில் சிறிலங்கா அமரவுள்ளதால் சிறிலங்காவுக்கு இந்த அமர்வு முக்கியமானதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த அமர்வில் பங்கெடுப்பதற்காக இன்று சில பிரமுகர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர்.
அந்த வகையில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து - பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏன் - மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேட் பெண்டோர் (Dr. Naledi Pandor) ஆகியோர் இன்று கொழும்பை வந்தடைந்தனர்.
அத்துடன், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும் கொழும்பை வந்தடைந்தார்.