அதிர வைக்கும் செம்மணி அறிக்கை..! இயற்கை பேரிடர், தொற்று நோயால் இறந்தவர்கள் - வெடிக்கும் சர்ச்சை
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்களின் அறிக்கை, சர்வதேச விசாரணையின் அவசியத்தையே வலியுறுத்துவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அவை தாமதப்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஆட்சியாளர்களையும் சம்பவத்துடன் தொடர்புடைய படைத்தரப்பினரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செம்மணி சிந்துபாத்தி பகுதியில் 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026ஆம் ஆண்டிலும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அகழ்வுப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தம் அல்லது பெருந்தொற்று
அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்களான ராஜ் சோமதேவா மற்றும் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், உயிரிழப்புகள் இயற்கை அனர்த்தம் அல்லது பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மீட்கப்பட்ட சில எலும்புக்கூடுகளில் துப்பாக்கிச் சன்னக் காயங்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணரவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்களின் வலிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமாயின், செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |