முற்றுகையிடப்பட்ட அலுவலகம்: பின்பக்க கதவால் வெளியேறிய வடக்கு ஆளுநர்
🛑 புதிய இணைப்பு
யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டிரஞ்சன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் என அனைவரும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிகாரிகள் அனைவரும் கலந்துரையாடல் முடிந்து வெளியேறினர்.
இறுதியாக வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் டிரஞ்சன் வெளியேறிய போது போராட்டக்காரர்கள் அவரை வழிமறித்த நிலையில், ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கும் என்று போராட்டக்காரர்களுக்கு அவர் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில், ஆளுநர் செயலகத்தில் அதிகாரிகள் எவரும் இல்லை என்றும், தாங்கள் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ஆளுநர் செயலகத்துக்குள் செல்ல முயற்சித்தவேளை காவல்துறையினர் அவர்களை வழிமறித்துள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆளுநரின் செயலாளர், ஜோசப் ஸ்டாலின் உட்பட போராட்டக்காரர்கள் சிலரை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
இதனடிப்படையில், இடம்பெற்ற இடமாற்றத்திற்கு ஏற்றவாறு செயற்படுங்கள் என ஆளுநரின் செயலாளர் தெரிவித்ததாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததுடன் நாடளாவிய ரீதியாக இதற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ஆளுநர் பின் பக்கத்தால் ஆளுநர் செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மேலதிக செய்திகள் - கஜிந்தன்)
🛑 முதலாம் இணைப்பு
யாழில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (15) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
ஆசிரியர்களின் இடமாற்றக் கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு கோரியும் அரசியல் தலையீடுகளை உடன் நிறுத்துமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
அந்தவகையில், “பழி வாங்காதே பழி வாங்காதே ஆசிரியர்களைப் பழி வாங்காதே”, “ஜேவிபி அரசே அராஜக்ததை நிறுத்து“, ” ஆளுநரே பதிலே கூறு”, அரசியல் பழிவாங்கலை நிறுத்து” போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை நேற்றைய இரண்டாம் நாள் போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மாற்றும் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) ஆகியோர் கலந்துகொண்டு போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
