மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தியா அழுத்தமா?? - அரசாங்கம் பதில்
மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.
அதற்கான அதிகாரமும் இந்தியாவிற்கு கிடையாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வாதப்பிரதிவாதங்களை துறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாகாண சபை தேர்தலை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் தேர்தல் தொடர்பில் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கை இவ்வருடத்தின் இறுதி பகுதியில் கிடைக்கப் பெறும்.
தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்தப்படும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பல விடயங்களுக்கு பொருத்தமற்றதாக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.