இரண்டு துண்டாக பிளவுபட்ட காசா: முற்றாக சுற்றிவளைத்த இஸ்ரேல்
காசா மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 7-ந் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதலையடுத்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இன்றுடன் 30 நாட்கள்
இதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகின்ற இந்த போர் இன்றுடன் 30 நாட்களை எட்டியுள்ளது.
இந்த போரில் காசாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா நகரம் சுற்றி வளைப்பு
இந்நிலையில் குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் காசா பகுதி "இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது' என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், இஸ்ரேலியப் படைகள் "காசா நகரை சுற்றி வளைத்துள்ளன" என்றும் இப்போது தெற்கு காசா மற்றும் வடக்கு காசா என்று இரண்டு துண்டாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.