சொந்த நாட்டு மக்களையே மிரட்டும் இஸ்ரேல் காவல்துறை: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் அதிகரிக்கும் நிலையில், காசாவிற்கு ஆதரவாக இஸ்ரேலில் கருத்து வெளியிடுபவர்களுக்கு இஸ்ரேல் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.
சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஹைஃபா நகரில் பேரணி
இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன. இஸ்ரேல் நாட்டிலும் அத்தகைய கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் ஹைஃபா நகரில் ஒரு பேரணி நடைபெற்றது. அதனை இஸ்ரேல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போரை எதிர்ப்பவர்களை மிரட்டும் வகையில் இஸ்ரேல் காவல்துறை தலைவர் கோபி ஷபாதி பேசிய காணொளி செய்திகளில் வெளியாகியுள்ளது
காசாவுக்கு ஆதரவாக பேசுவது
அந்த காணொளியில் அவர், “காசாவுடன் போர் வேண்டாம் என்றோ, காஸாவுக்கு ஆதரவாகவோ யாரேனும் பேசினால் அவர்களை காசாவுக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி விடுகிறேன்.
அங்கு சென்று அவ்வாறு பேசிக் கொள்ளட்டும். இஸ்ரேலில் காசாவுக்கு ஆதரவாக பேசுவதை அனுமதிக்க முடியாது” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில், அமைதியை விரும்பி போரை எதிர்ப்பவர்களை காவல்துறை தலைவர் இவ்வாறு கடுமையாகப் பேசியுள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.