வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி
புதிய இணைப்பு
வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், இன்று (27) நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவிற்காக தமிழரசுக்கட்சி சார்பில் தி.கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டதுடன் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கபட்டார்.
தவிசாளர், உப தவிசாளர் தெரிவு
அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது இதன்போது தெரிவுகளை இரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
சபையில் மீதம் இருந்த 15 உறுப்பினர்கள தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்த நிலையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு15வாக்குகள் ஆதரவாக கிடைக்கப்பெற்றது.
அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கியமக்கள் சக்தியின்2வாக்குகளும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 4 வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.
கிருஸ்ணவேணி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.
உப தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதனின் பெயர் பிரேரிக்கப்பட்டதுடன் வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் இன்று (27) காலை நடைபெற்றது.
தவிசாளர் தெரிவுக்காக தமிழரசுக் கட்சியின் பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கார்த்தீபன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதன்போது தெரிவுகளை .ரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
சபையில் இருந்த உறுப்பினர்கள்
சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.
அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப் பெற்ற நிலையில் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக சங்கு கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
துணுக்காய் பிரதேச சபையைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சி
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சி உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தெரிவாகியுள்ளார்.
துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசார், உபதவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (26-06-2025) நடைபெற்றது.
13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தவிசாளர் தெரிவிற்காக தமிழரசுக்கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சிவகுமார். சிந்துஜன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும், சுயேட்சைக்குழுவின் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலைமை வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு கங்காரு சின்னத்தில் வெற்றி பெற்ற ஒரு உறுப்பினரினதும் ஆதரவுடன் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினம் செந்தூரன் 06 வாக்குகளை பெற்ற நிலையில் சி. சிந்துஜன் 05 வாக்குகளை பெற்றார்.
இந்த நிலையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கனகரத்தினம் செந்தூரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கரைதுறைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சி
முல்லைத்தீவு (Mullaitivu) - கரைதுறைப்பற்று பிரதேச சபை (Maritimepattu PS) தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (26) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அமைப்பதற்காக எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர், உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
தவிசாளர் தெரிவு
தவிசாளர் தெரிவிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
21 உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் 11 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் 04 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 05 வாக்குகளையும் பெற்றிருந்தனர். தமிழரசுக் கட்சி உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா நடுநிமைமை வகித்தார்.
இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
நடைபெற்ற வாக்கெடுப்பு
அத்துடன் உபதவிசாளர் தெரிவிற்காக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன், சுயேட்சை குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் ஒன்பது வாக்குகளையும் சுயேட்சை குழு உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆறு வாக்குகளையும் பெற்றுக்கொள்ள ஆறு உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்தனர்.
இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



