வட்டுக்கோட்டை இளைஞன் வெட்டிக்கொலை : குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா கடற்படை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடந்த 11 ஆம் திகதி வன்முறை கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்தமைக்கு சிறி லங்கா கடற்படையினரும் காரணமென அவரது மனைவி முன்வைத்த குற்றச்சாட்டை, கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.
வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட போது தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற போதிலும் அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியதாக மனைவி கூறியிருந்தார்.
கடற்படை ஊடகப்பேச்சாளரின் தகவல்
இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு பதிவு காணொளி வெளியாகியுள்ள நிலையில், பொன்னாலை சந்தியில் உள்ள கடற்படையின் சோதனைச் சாவடியில் இருவர் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், குறித்த இருவரால் குழப்ப நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனதாகவும் கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால்
எனினும் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.