விடுதலைப் புலிகளை அரசாக்கிய யாழ் இடப்பெயர்வு… 28வருட கனக்கும் நினைவுகள்…
யாரும் நம்பியிராத விதமாய், வானைப் போர் மேகங்கள் சூழ்ந்தன. ஒரு நாள் இயல்பாய் மங்கிற்று என மக்கள் நம்பியிருந்த பொழுதில், கைவிளக்கை ஏற்றிய ஒரு முதிர்ந்த தாயிடம் மகள் ஓடோடி வருகிறாள்.
மண்ணோடு வேர் போல பற்றியிருந்த நிலத்தை ஒருபோதும் பிரியோம் என்று நம்பியிருந்த முதிர்ந்த தாயின் முகம் அச்சத்தில் உழல்கிறது. எதிரி எம்மை ஆக்கிரமித்து வருகிறான், மக்களே இடம்பெயருங்கள்… என்ற போராளிகளின் குரலை அந்த தாயிடத்தில் மகள் சொல்கிறாள்.
வாசற்படியைப் பிடித்துக் கொண்ட தாய், தன் கைகளை தளர்த்த மறுக்கிறாள். எல்லோரையும் அனுப்பிவிட்ட அந்த தாய், வீட்டில் உறைந்துபோகிறாள். போர் நிலத்தை விழுங்கியபடி வந்தது.
இடப்பெயர்வெனும் துயர்
இடப்பெயர்வென்பது சொற்களில் விபரித்து முடிகிற விசயமன்று. இடப்பெயர்வென்பது சொல்லி முடிகிற கதையுமன்று. இடப்பெயர்வுகளின் குரூர நினைவுகளாலும், இடபபெயர்வுகளின் துயர நினைவுகளாலும்கூட நம் கூட்டு நினைவுகள் நிரம்பியுள்ளன.
உலகில் கொடுமையான இடப்பெயர்வுக்கு உள்ளான சனங்களில் ஈழத் தமிழர்களும் ஒரு தரப்பினர். உரிமை மறுக்கப்பட்ட ஈழத் தமிழினம் அதற்கெதிராய் எழுந்து போராடுகையில் அந்த ஈழத் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போர் இடப்பெயர்வுகளையும் இனவழிப்பின் தீர்வுகளாய் சுமத்திற்று.
எந்த நிலத்திற்காக ஈழத் தமிழ் மக்கள் போராடினார்களோ, அந்த நிலத்தில் இருந்தே மண்ணோடும் மண்ணடி வேரோடும் ஈழத் தமிழர்கள் பிடுங்கி எறியப்பட்டார்கள்.
ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் நிலப்பெயர்வின் தழும்புகள் இன்னமும் தீராக் காயங்களாகவே உள்ளன.
கடலில் வாழும் மீனைப் பிடித்து கடலில் இருந்து தூக்கி வெளியில் தரையில் வீசுகையில் அது துடிதுடித்து வீழ்ந்து மடிகிறது. அதன் கடல் வாழ்வை எந்த தரையாலும் எந்த நீராலும் தந்துவிட முடிவதில்லை.
தரையில் முளைத்த செடியொன்றை பிடுங்கி தணலில் போடும்போது அது வாடி வதங்கி கருகுகிறது. நிலச் சூழலுக்கு அமைந்த ஒரு செடி வேறெந்த நிலத்திலும் தளைப்பதேயில்லை.
இடப்பெயர்வென்ற கொடூரச் செயல், ஒரு குடியை கருக்கி உறிஞ்சுகிறது. இடப்பெயர்வென்ற இரக்கமற்ற செயல் ஒரு குடியை திருகி பெருங்கடலிலும் பெருங்குழியிலும் புதைத்துவிடுகிறது.
ஓரிரவில் பெயர்ந்த நிலம்
யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு சிறிய நிலப்பரப்பென்ற போதும் மக்கள் செறிந்து வாழ்ந்து வரும் பகுதி. 1995களில் அப்போதைய யாழ்ப்பாணத்தின் குடித்தொகை சுமார் ஐந்துலட்சம் மக்கள். போக்குவரத்து வசதிகள், வீதி விஸ்தரிப்புக்கள் இல்லாத காலமது.
ஒடுங்கிய வீதியின் வழியே அக் காலத்தின் வாகனங்கள் அசைந்த யாழ்ப்பாணம் ஓர் இனிய நிலமென்றே இருந்தது. அத்தகைய யாழ்ப்பாணம் ஓரிரவில் பெயர்ந்தது என்ற நம்ப முடியாத துயரம் அன்றைக்கு அரங்கேறியது.
ஈழத் தமிழர்கள் சந்தித்த இடம்பெயர்வுகளில் மிகத் துயரம் வாய்ந்த யாழ் இடப்பெயர்வு, ஈழத் தமிழர்கள் சந்தித்த மிகப் பெரிய இடப்பெயர்வென்றும் ஆகிற்று.
உலக வரலாற்றில்கூட இத்தகைய பெரும் இடப்பெயர்வு பதிவாகவில்லை என்று சொல்லப்படுகிறது. சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறைத் திட்டம், மாபெரும் போராக உருவெடுத்தது.
அப்போது, யாழ்ப்பாணக் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. என்றபோதும், பலாலி, காங்கேசன்துறை முதலிய பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் முகாம்கள் இருந்தன.
ஒட்டுமொத்த யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற போர்வெறி கொண்டது இலங்கை அரசு. இந்த நிலையில், இராணுவ முகாம்களில் இருந்து சூரியக் கதிர் என்ற இராணுவ ஆக்கிரமிப்புப் போரைத் துவங்கியது அரசு.
சமாதான முறிவில் வெடித்த யுத்தம்
அன்றைய காலத்தில் சந்திரிக்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகளுக்கான பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, சமாதானப் பேச்சுக்களை முறித்துக் கொண்டு இனவழிப்புப் போரைத் துவங்கினார்.
ஒக்டோபர் 17, 1995ஆம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நவடிக்கை துவங்கப்பட்டது. இலங்கை இராணுவ தளபதிகள் ரொஹான் தளுவத்த, ஜானக பெரேரா ஆகியோர் தலைமையில் துவங்கிய சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையில் 20,000 சிங்கள இராணுவத்தினர் மாபெரும் படையெடுப்பில் இறங்கினர்.
அதேவேளை கடற்படையும் விமானப்படையும் தாக்குதல்களில் இறங்கி மாபெரும் போரை யாழ் மண்ணில் நிகழ்த்தியது.
சந்திரிக்காவின் சூரியக்கதிர் நடவடிக்கையின் உச்சமாக யாழ் இடப்பெயர்வு கருதப்படுகிறது. ஒக்டோபர் 30ஆம் நாளன்று, ஒரு சாதாரண நாளாகவே விடிந்தது.
ஆனால் அன்றைய இரவு மாபெரும் துயர நதியாய் பாய்ந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலம்பொருந்திய நிலையில் இருக்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்தை விட்டு பெயர்கின்ற நாள் ஒருபோதும் வந்துவிடாது என்று நம்பியிருந்த மக்கள் திடுக்குற்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் யாழ்ப்பாணத்தை விட்டு மக்களை வெளியேறுமாறு அறிவித்தார்கள். ஒலிபெருக்கியில் யாழ் மண்ணை விட்டு வெளியேறக் கேட்டு புலிப் போராளிகள் குடாநாடெங்கும் அறிவித்த அக் குரல் இன்னமும் கேட்பதைப் போலத்தான் இருக்கிறது.
பூவும் நடக்குது… பிஞ்சும் நடக்குது…
இருளோடும் துயரும் கசிந்த இவ்விராப் பொழுதில், திடுக்குற்ற யாழ் மக்கள், எங்கு எப்படிச் செல்வதென அல்லாடினர். கையில் கிடைத்த பொருட்களை எடுத்தபடி திக்குமுக்காடினர்.
“பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல், இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குதே தங்குமிடம் தெரியாமல் கூடு கலைந்திட்ட குருவிகள் - இடம் மாறி நடக்கின்ற அருவிகள்..” என இந்த இடப்பெயர்வை கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடியிருக்கிறார்.
யாழ்ப்பாண மண் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. யாழ் நிலமே உதிர்ந்த நாளது. யாழ் குடாநாட்டு மக்களை வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் வன்னிக்கும் பெயர்ந்து செல்லுமாறு அறிவித்த புலிப் போராளிகளின் குரல் கேட்டு மக்கள் நடந்தனர்.
ஒடுங்கிய இரு சிறு வீதியின் வழியே ஒடுக்கப்பட்ட மக்கள் நெரிசலில் அமுங்கினர். ஐந்து இலட்சம் மக்களும் அடியெடுத்து வைக்க முடியாத சனவெள்ளத்தில் மிதந்தனர்.
அழைத்துச் செல்ல முடியாமலும் வீட்டை விட்டு வர விருப்பம் இன்றி முதியவர்களை வீடுகளில் விட்டும், கைவிட்டும் வந்த துயரங்களும் நிகழ்ந்தேறின. இடம்பெயர் வழிகளில் களைத்து இறந்தவர்களும், இறந்தவர்களின் உடலங்களை அப்படியே வழியில் கைவிட்டு வந்த கதைகளும்கூட நடந்தன.
வானம் மேலால் மழையைப் பொழிந்தது. விமானங்களும்கூட குண்டுமழை பொழிந்தன. இன்னொரு பக்கம் ஆக்கிரமித்து வரும் அரச படைகளின் எறிகணை மழை. ஒரு இரவை கொடும் இரவு ஆக்கியது சிங்களத்தின் போர். ஒரு வீதியை கொடும் வீதி ஆக்கியது பேரினவாதப் போர்.
விடுதலைக்கு உரமான நிலப்பெயர்வு
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் யாழ் இடப்பெயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிங்கள அரசின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக முதன் முதலில் விடுதலைப் புலிகள் மரபுவழிப் போரை நிகழ்த்தினர்.
மக்களுடன் மக்களாக புலிகள் இயக்கம் வன்னிக்கு பின்வாங்கியது. யாழ் இடப்பெயர்வு ஈழத் தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்திய தாக்கம் மிகு ஆக்கிரமிப்பாகும்.
இந்தக் கால கட்டத்தில், மக்களின் ஆதரவு புலிகளுக்கு பன்மடங்கு அதிகரித்தது. விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானம் பல்வேறு எழுச்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் உள்ளானது.
வன்னியிலும் வடக்கு கிழக்கிலும் தமிழீழ நிழலரசொன்று தளைத்து பலம்பெற யாழ் இடப்பெயர்வின் துயரும் உரமாயிற்று எனலாம். புலிகள் ஒரு அரசாகினர்.
மறுபுறத்தில் சிங்கள அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட யாழ்ப்பாணத்தை செம்மணிப் படுகொலைகளும் வல்லைவெளிக் காணாமல் ஆக்குதல்களும் இருண்ட நகரம் ஆக்கியது.
யாழ் இடப்பெயர்வுக்கு அடுத்து, முல்லைத்தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய செய்தி அப்போது ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் சிறிலங்கா அரசுக்கு அச்சத்தைப் பெருக்கியது. உலகும் புலிகள் பக்கம் திரும்பிப் பார்த்தது.
வரலாறு ஒரு பெரும் பாடம் மாத்திரமல்ல. அது வரும்காலத்தை கையாள உதவும் கருவியும்கூட. இருபத்தெட்டு ஆண்டுகளின் முன்னர், நிகழ்த்தப்பட்ட யாழ் இடப்பெயர்வு, ஈழப் போராட்ட வரலாற்றில் பெரும் நினைவுகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியதை நினைவுகூர்வதென்பது எமது கடமை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 30 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.