மாப்பாண முதலியாரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று -யாழ் முஸ்லிம் மக்கள் இரங்கல்
இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் (Iragunatha Kumaradas Mappana Mudaliar)அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று என யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் என்றாலே அதன் முக்கிய அடையாளங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் அது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயமாகும். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரியாக 1964ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றி வந்த ரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களின் இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் - யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது இன்று நேற்று உருவாகியது அல்ல. மிகவும் பழமை வாய்ந்ததாகும். யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் வரலாற்றில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பக்கங்களும் மறுக்கப்பட முடியாத ஒன்று.
அந்த வகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களையும் - சைவ மக்களையும் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாக அதிகாரியின் இறப்பு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.
அவரது இழப்பு பாரிய இழப்பாகும். அவரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நாமும் அத்துயரில் பங்குகொள்கின்றோம்.