யாழ் - வேலணை பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்றையதினம் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.
சபையின் தவிசாளர் மேலதிகமாக ஒரு வாக்கினை செலுத்த முடியும் எனும் உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு அமைவாக தவிசாளர் தனது வாக்கினை ஆதரவாக செலுத்தியதன் மூலம் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


