நீதிக்கட்டமைப்பை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் ஜே.வி.பி.யின் பெலவத்தை அலுவலகம்
நாட்டின் நீதிக்கட்டமைப்பை ஆக்கிரமிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்தை காரியாலயம் முயற்சிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதால் தான் ஆயுதமேந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி மக்களாணையுடன் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது என்றும், இந்நிலையில் ஜனநாயகத்தை பாதுகாக்க சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உரிய சட்ட நடவடிக்கை
“ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பழிவாங்கலுக்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் தரப்பினரை ஊழல்வாதிகள் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது.
இந்த அரசாங்கத்தில் முறையற்ற வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. நிலக்கரி கொள்வனவு ஊடாக அரச நிதி மோசடி செய்யப்பட்டது.
அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
ஆளும் தரப்பின் ஊழல் மோசடிகள் விவகாரத்தில் ஜனாதிபதி உண்மையில் கண்களை மூடிக் கொண்டு தான் இருக்கிறார்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டு வரப்படும் அதன் செயற்பாடுகள் இறுதியில் நாட்டுக்கு எதிராகவே அமையும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |